மாவிலாறு அணை உடைப்பு






 


மாவிலாறு அணை உடைப்பு: கங்குவேலி விவசாயிகளின் பாதிப்புகளை நேரில் ஆராய்ந்தார் விவசாயப் பணிப்பாளர் நாயகம்.

மாவிலாறு அணை உடைப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி விவசாய கிராமத்திற்கு, இலங்கை விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் Dr. W. A. R. T. விக்கிரமசிங்க தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று (18) விசேட கள விஜயமொன்றை மேற்கொண்டது.

கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி ஏற்பட்ட மாவிலாறு அணை உடைப்பு காரணமாக, மூதூர் பிரதேசத்தின் பல குடியிருப்புக்களும் விவசாய நிலங்களும் பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுத்தன.

இதில் குறிப்பாக கங்குவேலி பகுதியில் மாத்திரம் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்தன.

​விவசாய நிலங்கள் மட்டுமன்றி, விவசாயிகளின் குடியிருப்புகளும் சேதமடைந்ததால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றாக முடங்கியுள்ளதோடு, அவர்கள் இன்னும் அந்தப் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

​ஜனாதிபதியின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய இடம்பெற்ற இந்த விஜயத்தில், விவசாயப் பணிப்பாளர் நாயகத்துடன் P. சிசிரகுமார (பயிற்சி மற்றும் விரிவாக்கல் பணிப்பாளர், இலங்கை விவசாயத் திணைக்களம்),

​எம். எஸ். ரினோஸ் (கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர்),

​ஐ. எல். பெளசுல் அமீன் (கிழக்கு மாகாண விவசாய பிரதிப் பணிப்பாளர்) ஆகிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை நேரில் பார்வையிட்ட அதிகாரிகள் குழு, மண்ணின் தரம் மற்றும் பயிர்ச் சேதங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

இதன்போது விவசாயிகள் தமக்கு ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார இழப்புகள் மற்றும் எதிர்கால பயிர்ச்செய்கை சவால்கள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கினர்.

​கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் நாயகம் Dr. விக்கிரமசிங்க, 

​"பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் உரிய நஷ்டஈடுகளை விரைவாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என உறுதியளித்தார்.

மேலும், தற்போதைய சூழலில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய மாற்று விவசாய முறைகள் மற்றும் நிலத்தைச் சீர்செய்வதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் அதிகாரிகள் இதன்போது வழங்கினர்.

இந்த விஜயத்தின் போது மூதூர் பிரதேச விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


   



Comments